கண் தெரியாத ஒரு அனாதை சிறுவன்

கண் தெரியாத ஒரு அனாதை சிறுவன் ஒரு கோயில் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் ஒரு பலகை இருந்தது. அதில் ‘எனக்கு இரண்டு கண்களும் தெரியாது. எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதி இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் எல்லாம் அந்த பலகையை பார்த்துக் கொண்டே சென்றனர். இரக்க குணம் படைத்த சிலர் பாவப்பட்டு போட்டுச் சென்ற கொஞ்சம் சில்லறை நாணயங்கள் அவன் வைத்திருந்த தட்டில் சிதறிக் கிடந்தது. அந்த நாணயங்கள் அவனின் ஒரு வேளை உணவுக்கு கூட போதாது. ஆனாலும் தன் வயிற்றை கழுவ இன்றாவது போதுமான பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த சிறுவனின் ஒளி இல்லாத பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெரியவர், கண் பார்வை இல்லாத அந்த சிறுவன் மீது இரக்கப்பட்டு சில நாணயங்களை அவர் முன்னால் இருந்த தட்டில் போட்டார். அப்போது அருகில் இருந்த பலகையை கவனித்து அதில் இருந்த வாசகத்தை படித்தார். பின் அந்த வாசகத்தை அழித்து விட்டு வேறு ஒரு வாசகத்தை எழுதி வைத்து விட்டுச் சென்றார். யாரோ பலகையில் எழுதுகிறார்கள் என்பதை தன் ஒலிக்குறிப்பில் உணர்ந்த கண்பார்வையற்ற அந்த சிறுவன், எதுவும் கூறவில்லை. அதன் பிறகு, ஆச்சரியமாக அந்த வழியாக சென்ற அனைவரும் அந்த சிறுவனின் தட்டில் காசு போட்டு விட்டுச் சென்றனர். முன்பு தன்னை கவனிக்காமல் சென்ற மனிதர்கள் இப்போது ஏதாவது உதவி செய்து விட்டுச் செல்வதை அந்த பார்வையற்ற சிறுவன் உணர்ந்தான். சிறிது நேரத்தில் தட்டும் நாணயத்தால் நிரம்பி வழிந்தது. இந்த மாற்றம் யாரோ பலகையில் எழுதியதால் தான் நடந்தது என்பதை அவன் உணரத்தவறவில்லை.
சூரியன் மறையும் மாலை வேளையில் காலையில் பலகையில் எழுதிய அந்த பெரியவர் வந்தார். சிறுவனின் தட்டில் நிறைய நாணயங்கள் இருப்பதை பார்த்ததும் மகிழ்ந்தார். பெரியவரின் அருகாமையை உணர்ந்த அந்த சிறுவன், ‘‘ஐயா, என் இயலாமையை விளம்பரப்படுத்தி நான் வைத்திருந்த அறிவிப்பு பலகையில், நீங்கள் ஏதோ மாற்றி எழுதினீர்கள் என நினைக்கிறேன். அதனால் தான் எனக்கு போதுமான சில்லறை நாணயங்கள் கிடைத்துள்ளது என்பதை உணர்கிறேன். இந்த குருட்டு அனாதைச் சிறுவனுக்கு நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. நீங்கள் அப்படி என்ன எழுதினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல முடியுமா,’’ என்று கேட்டான்.
அதற்கு சிரித்துக் கொண்டே அந்த பெரியவர் சொன்னார். ‘‘நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே நான் வேறு விதத்தில் மாற்றி எழுதினேன். நீ, ‘எனக்கு இரண்டு கண்களும் தெரியாது. எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதியதை கொஞ்சம் மாற்றி, ‘இன்றைய நாள் மிக அழகானது. ஆனால் எனக்கு அதை பார்க்கும் பாக்கியமில்லை’ என்று மாற்றி எழுதினேன். அவ்வளவுதான்,’’ என்றார். அவனுக்கு அந்த மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.
அந்த சிறுவன் எழுதி வைத்திருந்ததற்கும், பின்னர் அந்த பெரியவர் மாற்றி எழுதியதற்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால் அந்த பெரியவர் மாற்றி எழுதியதில் ஒரு விஷயம் இருந்தது. அந்த சிறுவன் தான் குருடு என்பதை மட்டும் அறிவித்தான். அதனால் அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லாமல் போனது. ஆனால் அந்த பெரியவர் மாற்றிய அறிவிப்பில், அதை பார்ப்பவர்களுக்கும் ஒரு செய்தி இருந்தது. அதாவது, அவர்கள் இந்த கண்பார்வையற்ற சிறுவனை விட பாக்கியம் பெற்றவர்கள் என சொல்லாமல் சொல்லப்பட்டிருந்தது. இது தான் அந்த சிறுவனுக்கு காசு நிறைய கிடைக்க வழி செய்தது. ஒரு விஷயத்தை சொல்வதில் புதுமையும், கேட்பவர்களையும், பார்ப்பவர்களையும் சிந்திக்க வைத்து தன் வயப்படுத்துவதாக இருந்தால் மற்றவர்களை விட நாம் விரைந்து முன்னேறலாம். அதற்கு கொஞ்சம் மாத்தி யோசிங்க!
Recent Comments