EPF & ETF

தனியார் துறையில் தற்போது புதிதாக பணியில் இணைந்து இருப்பவர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் (EPF), (ETF) தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தற்போது உள்ள இளைஞர்கள் சமுதாயத்திற்கு இதனை பெறுவதற்குரிய வழிமுறைகள் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் தெரியாமலே சென்று விடுகின்றது, அந்தவகையில் நாம் உங்களுக்கு இதை பற்றி சிறிய தெளிவூட்டலை தருகின்றோம்.
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியரின் நன்மை கருதி 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் 1958 யூன் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோன்று மேற்கூறப்பட்ட தனியார்துறை ஊழியரின் நன்மையின் பொருட்டு உருவாக்கப்பட்ட மற்றொரு திட்டமாக ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளது.
இத்திட்டம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்கம் கொண்ட சட்டமாக 1981.மார்ச் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஊழியர் சேமலாபநிதிக்கு (ETF) ஊழியரின் சம்பளத்தில் 8 வீதமும் தொழில் வழங்குவோரது கொடுப்பனவாக அதாவது வைப்பாகப் 12 வீதமும் ஆக மொத்தம் 20% மாதாந்தம் ஊழியரின் பெயரில் வைப்பிலிடப்படுகின்றது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் உறுப்பினர்களைத் தகைமை கொண்டுள்ள தனியார் துறை சார்ந்த நிரந்தர, நிரந்தரமற்ற, பயிற்சியிலுள்ள, தற்காலிக அமைய, நாட் சம்பள அடிப்படையில், காலத்தை அல்லது வேலையின் அளவை அளவிட்டு ஊதியம் பெறும் மற்றும் தரகு அடிப்படையில் ஊதியம் பெறும் 14 வயதிற்கு மேற்பட்ட சகலரும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் (ETF) உறுப்புரிமை பெறும் தகைமை கொண்டவர்களாவர்.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊழியரின் வருமானத்திலிருந்து மாதாந்தம் 8% கழிக்கப்படுவதுடன் தொழில் வழங்குவோர் 12% செலுத்துகின்றனர்.
ஆனால் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு ஊழியரிடமிருந்து அறவீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஊழியரின் மாதாந்த வருமானத்தில் 3 விகிதத்திற்கு சமமான தொகையைத் தொழில் வழங்குவோர் ஊழியரின் கணக்கில் வைப்பிலிட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான வைப்பு நிதி எந்தவொரு ஊழியரிடமிருந்தும் அறவிடப்படக் கூடாது என்பதை சட்டம் வலியுறுத்துகின்றது.
மாதாந்தம் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய தொகை தொழில் வழங்குநரால் அடுத்து வரும் மாத இறுதி நாளுக்குள் மேற்படி நிதியச் சபைக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பப்பட வேண்டும்.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கணக்கானது ஊழியரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஊழியர் சேமலாபநிதி உறுப்புரிமை இலக்கம் என்பவற்றின் கீழ் பேணப்படும்.
உரிய காலத்தில் உதவுதொகை செலுத்தப்பட வேண்டும். தாமதம் ஏற்பட்டால் தாமதக் கட்டணமாக உதவு தொகையின் அளவில் மேலதிகமாகச் செலுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
10 நாட்களுக்கு உட்பட்ட தாமதத்திற்கு உதவு தொகையின் 5 விகிதம், 10 நாட்களுக்கும் ஒரு மாதத்திற்கும் உட்பட்ட தாமதத்திற்கு 15%, ஒரு மாதம் முதல் மூன்று மாத காலம் வரையான தாமதத்திற்கு 20%, மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையான தாமதத்திற்கு 30%, ஆறுமாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரையான தாமதத்திற்கு 40%, பன்னிரெண்டு மாதங்களுக்கு மேற்பட்ட தாமதத்திற்கு 50% என்று தாமதக் கட்டண அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் வழங்குநர்கள் உதவுத் தொகை செலுத்த தவறும் நிலையில் உதவுதொகையும், தண்டப் பணமும் தொழில் வழங்குவோரிடமிருந்து அறவிட சட்ட ஏற்பாடுகளுள்ளன. குறிப்பிட்ட தொழில் நிறுவனம் அமைந்துள்ள நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுப்பதன் மூலம் அறவீடுகளை மேற்கொள்ளக் கூடிய விதிமுறைகள் நடைமுறையிலுள்ளன.
எக்காரணம் கொண்டும் தொழில் வழங்குவோரால் நிதியத்திற்கான உதவு தொகையோ, தண்டப்பணமோ ஊழியரின் வருமானத்திலிருந்து ஒருபோதும் அறவிட முடியாது. (அறவிடக் கூடாது என்பது சட்டமாக உள்ளது)
ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வைப்பிலிடப்பட்ட பணமும் அதற்கான வட்டியும் ஊழியர் ஒருவர் தொழிலிலிருந்து விலகிக் கொள்ளும்போது முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஏதாவது விபத்து அல்லது சுகவீனம் காரணமாக தொழிலாற்றும் நிலைமை முடிந்து விட்டதாக வைத்திய சான்றிதழுடன் விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் போது தொழிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
உறுப்பினர் ஒருவர் இறப்பின் உறுப்பினர் இறப்பதற்கு முன் நியமனம் செய்துள்ள உரித்தாளிக்கு அல்லது உறுப்பினரின் சட்டபூர்வமான உரித்தாளர்களுக்கு நிதியத்தின் இருப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உறுப்பினர்களாக இருப்போருக்கு மேலும் பல நன்மைகள் உள்ளன. அவையாவன:-
- 70 வயது வரை கிடைக்கும் தன்னியக்க ஆயுள் காப்புறுதி நன்மைகள்.
- நிரந்தர அல்லது முழுமையான இயலாமைக்கான இழப்பீட்டு காப்புறுதி. அதன் மேலெல்லை 15,000/= வரை. இருதய சிகிச்சைக்காக 100,000/= வரையான கொடுப்பனவு.
- கண்ணில் பொருத்திய வில்லைகளைக் கொள்வனவு செய்வதற்காக 3000/= வரை.
- 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளில் அதிகூடிய விசேட சித்திகளைப் பெற்ற தகைமையுள்ள மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் 10,000/= ஸ்ரீ ஜயவர்தனபுர அல்லது நவலோக்க வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு.
- வெளிநாடுகளில் இருதய மாற்று சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு.
- “ஸ்ரம சுவரெகவரன” மருத்துவக் காப்புறுதி.
பொதுவாக ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குத் தமது வருமானத்தின் 3 வீத அளவைத் தொழில் வழங்குபவர்கள் செலுத்துவதும் பின் நாட்களில் தாம் அதை வட்டியுடன் பெற்றுக் கொள்ளும் உரித்துடையவர்கள் என்பதை மட்டுமே பலர் அறிந்து வைத்துள்ளனர்.
தொழிற்சட்டங்கள் தொடர்பாகவும், அவை நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தொழில் வழங்குவோருக்கும், தொழில் செல்வோருக்கும் போதிய அறிவு இருப்பது அவசியமாகும்.
இதன் மூலம் தொழில் வழங்குவோர் தமது கடமைகளையும், தொழில் செல்வோர் தாம் பெற்றுக் கொள்ள உரித்துடைய நலன்களையும் அறிந்து கொள்ள முடியும்.
Recent Comments