கோவிலில் இறைவனுக்கு அணிவித்த மாலையை வீட்டில் சுவாமி படங்களுக்கு இடலாமா?

பொதுவாக, தெய்வங்களுக்கு ஒருமுறை சாத்தப்பட்ட பூமாலைகள் நிர்மால்யம் எனப்படும். ஆகவே, அதே பூமாலையை அதே தெய்வத்துக்கோ, வேறு தெய்வங்களுக்கோ மறுபடியும் அணிவிக்கக் கூடாது.
பஞ்சலோக விக்ரக வடிவிலோ அல்லது லிங்க வடிவிலோ அல்லது படங்கள் வடிவிலோ அல்லது யந்திர வடிவத்திலோ தெய்வங்கள் இருக்கலாம்.
எப்படிப்பட்ட வடிவத்தில் இருந்தாலும், ஒரு தெய்வத்துக்கு ஒருமுறை பூமாலை அணிவிக்கப்பட்டால், அதே பூமாலையை மறுபடியும் அந்த தெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வங்களுக்கோ அணிவிக்கக் கூடாது.
கோயிலில் தெய்வங்களுக்கு சாத்தப்பட்ட பூமாலையை பிரசாதமாக நம்மிடம் தந்தால் அதை நாமோ, நம்மைச் சேர்ந்தவர்களோ பக்தியுடன் போட்டுக் கொள்ளலாம்.
பிறகு அதை மற்றவர்களின் கால்கள் படாத தூய்மையான இடத்தில் வைத்துவிட வேண்டும்.
மறைந்த முன்னோர்களும் ஒருவிதத்தில் தெய்வத்துக்குச் சமமானவர்கள் என்பதால் முன்னோர்களின் படத்துக்கும் நிர்மால்ய தோஷமுள்ள இந்தப் பூமாலையைப் போடக்கூடாது.
புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட பூமாலைக்குத்தான் இந்த விதி பொருந்தும். தங்கம், வெள்ளி, உத்திராட்சம், ஸ்படிகம், துளசி போன்ற மாலைகளுக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது என்பதால், ஒரே மாலையை பல தெய்வங்களுக்கும் மாறி மாறி அணிவிக்கலாம்.
ஆனாலும், தங்கம், வெள்ளி போன்ற மாலைகளையும் ஒருமுறை நாம் (மனிதன்) அணிந்து கொண்டுவிட்டால், அவற்றை மறுபடி தெய்வத்துக்கு அணிவிக்கக் கூடாது.
Recent Comments