பிரதோஷ விரதம்

பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.
பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.
இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வணங்க வேண்டும்.
பின்னர் இடமாக சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும் போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டு வழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.
****************************************************
002) மகா பிரதோஷம்
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாச பிரதோஷம், மஹா பிரதோஷம், ப்ரளய பிரதோஷம் என்று ஐந்து வகையாக பிரதோஷத்தைப் பிரித்துள்ளனர். பிரதோஷம் என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலம் என்று பொருள். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத் தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷகாலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறைதிரயோதசி திதி மாலைப்பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
Recent Comments