வரலட்சுமி விரதம்.

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும்.
வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. இவர்கள் தனது மகளான சியாமபாலாவை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான்.
அப்போது, ஒருமுறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், தோன்றி சுரசந்திரிகா விடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி எடுத்துறைத்து அதை கடைபிடிக்குமாறு கூறினாள்.
ஆனால், சுரசந்திரிகாவோ லட்சுமி தேவியை யாரோ எனக் கருதி கோபத்தில் மகாலட்சுமியை விரட்டியடித்தாள்.
லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.
இதைக் கேட்டு மனம் வருந்திய சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப் படுத்தி அவரிடமிருந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றி அறிந்து கொண்டு விரதம் கடைபிடிக்க ஆரம்பித்தாள்.
இந்த விரதத்தின் மகிமையால் அவள் மிகுந்த செல்வ சிறப்பை அடைந்தாள்.
இதை அறிந்த பின்பு, லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.
மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும்.
சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.
*********************************************************************
வரலட்சுமி விரதம் – 002
லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று (04.08.2017) இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்.
இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.
வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
நிவேதனப் பொருட்கள்:
சர்க்கரைப் பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை
விரத முறை:
இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
விரத பலன்கள்:
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)
மகாலட்சுமி காயத்ரீ :
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்
ஸ்கந்த புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகிமையை சிவபெருமான் விளக்குகிறார். சுமங்கலிகளால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் மற்றும் மங்கலத்தின் இருப்பிடமாக மகாலட்சுமி விளங்குகிறாள். அறிவுசார்ந்த, நற்குணமுள்ள மக்கட்பேறு, கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி மகாலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த விரதத்தன்று நீராடி, புத்தாடை அல்லது தூய ஆடை உடுத்த வேண்டும். தாமரை கோலம் வரைந்து, அதன் நடுவில் தேர் வடிவ சிற்பம் அல்லது பலகை வைக்கவேண்டும். புது அரிசி, மாவிலை, தேங்காயுடன் கூடிய ஒரு கலசத்தை அதில் வைத்து மகாலட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். குடத்தில் இருக்கும் புது அரிசி, எதிர்கால வளர்ச்சியையும், சுபிட்சத்தையும் குறிப்பதாகும். கலசத்துக்கு பூஜை செய்த பிறகு, கணேச பூஜையும், பிறகு மங்கல சூத்திரமான மாங்கல்ய பூஜையும் நடத்த வேண்டும். வரலட்சுமி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை(காப்பு) கட்டுவது தான்.
பூஜை முடிந்த பின், குங்குமம், மஞ்சள்கயிறு, பூ , வஸ்திரம் முதலிய மங்கல திரவியங்களை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுப்பர். உணவும் வழங்குவர். லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு பொருள் வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள். அவள் வித்யாசக்தியாக இருந்து, நல்ல கல்வியும் தருகிறாள். தன் பக்தர்களை பகவான் விஷ்ணுவுக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்களது முக்திக்காக அவரிடம் சிபாரிசு செய்கிறாள். பகவான் விஷ்ணு அல்லது ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் சக்தியே மகாலட்சுமி. அழகு, கருணை, அழகான இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் எல்லாமே அவளது தோற்றங்கள். லட்சுமிதேவி இல்லாமல் சந்நியாசிகள் கூட தங்கள் ஆஸ்ரமத்தையோ, பிரசாரத்தையோ நடத்த முடியாது.
இல்லறத்தாரைக் காட்டிலும் அவர்களுக்குத் தான் லட்சுமி தேவி அதிகம் தேவைப்படுகிறாள். ஏனெனில், மக்கள் நன்மைக்காக அவர்கள் பெரும் தொண்டு செய்ய வேண்டியுள்ளது. ஆதிசங்கரர் தேவியையும், லட்சுமியையும், சரஸ்வதியையும் தமது பணியில் வெற்றிக்காக வழிபட வேண்டி நேரிட்டது. கடந்த காலத்தில் பெரும் ஆன்மிகப்பணி ஆற்றிய பெருமக்களும் இறை தூதர்களும் அன்னை லட்சுமிதேவியையும், சரஸ்வதியையும் ஆராதித்தவர்களே ஆவர். அன்னை மகாலட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.
Recent Comments