பொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.

#இல்லை!! #இவ்வளவுதான்!!!#முடியாது!!#கிடைக்காது!!#இப்போதில்லை!!#தரமாட்டேன்!!!
கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் விரும்பியதொன்று கிடைக்காமல் போகும்போது பிள்ளைகள் தவறான முடிவையே எடுப்பார்கள். ஆதலால் கிடைக்காமல் போகக்கூடிய விடயங்களும் இந்த உலகத்தில் உண்டு என சிறுவயதிலேயே உணரச் செய்யுங்கள்.
பிள்ளைகளுடன் தினமும் குறிப்பிட்டளவு நேரத்தை செலவு செய்ய தயாராகுங்கள். வீட்டைவிட்டு வெளியில் செல்லத் தொடங்கிய காலந்தொட்டு(பாலர் வகுப்பு) நாளாந்தம் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக நட்புணர்வுடன் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அத்தகைய செயற்பாடு காலப்போக்கில் உங்கள் பிள்ளைகளை கட்டிளம் பருவ மற்றும் இளம்பருவ பிரச்சனைகளையும் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக மாற்றிவிடும்.
நண்பர்களுடன் பழகுவதற்கு வாய்ப்புக் கொடுங்கள். அதேவேளை உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வட்டம் தொடர்பில் கவனம் கொள்ளுங்கள். ஏனெனில் பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது சேரும் பாத்திரமும் நல்லதாக இருந்தால் மட்டுமே பாலின் தன்மை பாதுகாக்கப்படும். ஆதலால் நண்பர்கள் தொடர்பிலும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை உங்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு அல்லது கொண்டாட்டங்களுக்கு அழைத்துவர சொல்லுங்கள். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளின் நண்பர்களுக்கும் இடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துங்கள். அது உங்கள் பிள்ளைகளின் தடம்மாறுதலை தடுக்க உதவும்.
Recent Comments